நாமக்கல்;ஆக,20-
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த மொஞ்சனூரைச் சேர்ந்தவர் சிவகாமி (35). அவர், மல்லசமுத்திரம் ஒன்றியம், பாலமேடு கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார்.
இவர் பணியாற்றும் பாலமேட்டில், உரிய அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளுவதாக, நேற்று முன்தினம் காலைதகவல் வந்தது. அதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்ற வி.ஏ.ஓ. சிவகாமி, மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து பணிகளை முடித்துக்கொண்டு, மாலை, 6 மணிக்கு, மொஞ்சனூரில் உள்ள தனது வீட்டுக்கு வி.ஏ.ஓ., சிவகாமி சென்று விட்டார். இந்நிலையில், அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், வி.ஏ.ஓ., சிவகாமியின் வீட்டிற்கு வந்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து, சீனிவாசனைப் பிடித்து, எலச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். தாக்கப்பட்டு காயம் அடைந்த சிவகாமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த எலச்சிப்பாளையம் போலீசார், வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கிய சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், பெண் வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கிய சீனிவாசனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும், விஏஓக்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், 100க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.ஓ., சுமன் உறுதி அளித்தார்.
அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

