*முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றி 110 கேமராக்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்*

சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் ‘கேர்செல்’ என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது. இந்த பாதுகாப்பு பிரிவு தேசிய பாதுகாப்பில் உள்ள நாட்டின் மிக முக்கிய பிரமுகருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புகளை வழங்குகிறது.

அதோடு அவரது இல்லம், அலுவலகம், அவர் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.மேலும் வெடிகுண்டுகள் துளைக்காத வகையிலான வாகனங்களிலேயே முதல்-அமைச்சரின் பயணம் திட்டமிடப்படுகிறது. கைப்பேசி சிக்னல்களை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்ட வாகனமும் பின் தொடர்ந்து செல்லும்.

இந்த நிலையில், முதல்-அமைச்சருக்கான பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை, ஆழ்வார்பேட்டை பகுதி, அவரது வீட்டை சுற்றியுள்ள முக்கியமான சாலைகள், முதலமைச்சர் வாகனம் அடிக்கடி பயன்படுத்தும் சாலைகள் ஆகியவற்றில் அதிக திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மட்டுமின்றி, முக அடையாளங்களை காணும் கேமராக்கள், ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படுகின்றன. இதற்கான இடங்களைக் கண்டறிந்து சென்னை காவல்துறையினர் எந்த இடத்தில் எந்த கேமராக்களை பொருத்த வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவு செய்து உள்ளனர். இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது.

இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முதல்-அமைச்சர் வீட்டை சுற்றிலும், அவரது வீட்டை சுற்றியுள்ள செனடாப் சாலை, டி.டி.கே. சாலை, எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சிக்னல், கே.பி.தாசன் சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, கதீட்ரல் சாலை, அண்ணாசாலை, சிவசங்கரன் சாலை, திருவள்ளூர் சாலை, தேனாம்பேட்டை சிக்னல் ஆகிய பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.

அதோடு சந்தேகத்துக்குரிய நபர்கள் முதல்-அமைச்சர் வீட்டின் அருகே சென்றாலோ, சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தாலோ ஏ.ஐ.தொழில்நுட்பம் வாயிலாக காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு சில வினாடிகளிலேயே எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்லும் வகையில் இந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.

இந்த கேமராக்கள் முழுமையாக அமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வரும் போது முதலமைச்சர் பாதுகாப்பு மேலும் பல மடங்கு மேம்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை சென்னை பெருநகர காவல்துறை கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twenty =

You missed