ஒரு சிறிய அளவிலான விசித்திரமான பொருள் நமது சூரிய மண்டலத்தில் அதிவேகமாக பயணித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது வெறும் வால் நட்சத்திரமா? அல்லது வேற்று கிரக தொழில்நுட்பமா? என்ற கேள்வியை விஞ்ஞானிகள் எழுப்பியுள்ளனர்.

ஜூலை 1 அன்று சிலியில் உள்ள ஒரு தொலைநோக்கி மூலம் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தப் பொருளுக்கு 3I/ATLAS (முன்பு A11pl3Z) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியிலிருந்து வந்த மூன்றாவது பொருள் என்பது 24 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் அளவு 10 முதல் 20 கிலோமீட்டர் அகலம் கொண்டதாகவும், மணிக்கு 1,30,000 மைல் (60 கி.மீ/வினாடி) வேகத்தில் பயணிப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது அடுத்த சில மாதங்களில் வியாழன், செவ்வாய், மற்றும் வெள்ளி ஆகிய கோள்களைக் கடந்து, நவம்பர் இறுதியில் சூரியனுக்குப் பின்னால் மறையும் என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

வேற்று கிரக பயணமா?

ஜூலை 16 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், ஹார்வர்டு விண்வெளி விஞ்ஞானி ஆவி லோய்ப் மற்றும் லண்டனைச் சேர்ந்த இன்டர்ஸ்டெல்லர் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆடம் ஹிபர்ட் மற்றும் ஆடம் க்ரோவல் ஆகியோர் இந்தப் பொருள் ஒரு வால் நட்சத்திரமாக இல்லாமல், வேற்று கிரக விண்கலமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இது ஒரு ரகசிய பயணத்தில் கூட இருக்கலாம் என்றும், இதன் விளைவுகள் “தீவிரமானவை” ஆக இருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன் பாதை பூமியின் சுற்றுப்பாதையுடன் 5 டிகிரி அளவில் ஒத்துப்போவது, இது தற்செயலாக நிகழ்வதற்கு 0.2% மட்டுமே வாய்ப்பு உள்ளதாக லோய்ப் கூறுகிறார்.

நவம்பர் இறுதியில் இது சூரியனுக்குப் பின்னால் மறைவது, பூமியிலிருந்து தொலைநோக்கிகள் மூலம் கண்காணிக்க முடியாதவாறு இருக்கலாம் என்று லோய்ப் யூகிக்கிறார்.

இந்தக் கோட்பாடு எல்லாராலும் ஏற்றுகொள்ளப்படவில்லை. கனடாவின் ரெஜினா பல்கலைக்கழகத்தின் வானியலாளர் சமந்தா லாலர், இது மற்றொரு சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இயற்கையான வால் நட்சத்திரம் என்று கூறியிருக்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ் லின்டாட் என்பவர் இந்த வேற்று கிரக கோட்பாட்டை “முட்டாள்தனமானது” என்று விமர்சித்து, இது உலகளவில் நடைபெறும் உண்மையான அறிவியல் ஆய்வுகளை குறைத்து மதிப்பிடுவதாக கூறியிருக்கிறார்.

இது ஒரு வேற்று கிரக உளவு கருவியாக இருக்கலாம் அல்லது வேகமாக பயணிக்கும் இயற்கையான பாறையாக இருக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் விஞ்ஞானிகள் யூகிக்கின்றனர். தற்போது, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் 3I/ATLAS பொருளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − five =

You missed