*ரூ. 13,000 கோடி மோசடி வழக்கு.. லண்டன் சிறையில் நீரவ் மோடி.. நாடு கடத்தப்படுகிறாரா?*

உலகின் முன்னணி வைர வியாபாரிகளில் ஒருவராக வலம் வந்த நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு காலக்கட்டங்களில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்திற்கு தப்பியோடினார். எனினும், 2019-ம் ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில்தான், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கியது. எனினும், தான் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, நீரவ் மோடி இங்கிலாந்தில் பல்வேறு நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அவரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ”தான் இந்தியாவிற்கு நாடு கடுத்தப்பட்டால் அங்கு துன்புறுத்தப்படுவேன்” என லண்டனில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். எனினும், அந்த மனுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் அவரது அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம், நாடு கடத்தலுக்கு இருந்த முக்கிய சட்டத் தடைகள் நீங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இங்கிலாந்து அரசின் இறுதி நிர்வாக நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, நீரவ் மோடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

You missed