நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் – மாணவர் சங்கத்தினர் கைது


திருச்சிராப்பள்ளி, ஜுலை,22,
ஒன்றிய பாஜக அரசின் நீட் வினாத்தாள் கசிவு, சி.பி.எஸ்.இ. ஆன்லைன் மதிப்பீட்டு முறைகேடுகள் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களைக் கண்டித்து, டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில் மாணவர்கள் மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டு வீசியதைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் சந்தோஷ் தலைமையில், திருச்சி மண்டல பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு 48 மணி நேரத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட  புதன்கிழமை அன்று ஒன்று கூடினர்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அவர்களைக் கைது செய்ய முற்பட்டனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி தலைமையில் தலைமைத் தபால் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தச் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டப் பொருளாளர் ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சூர்யா, ரவி, தென்றல் மற்றும் நிர்வாகிகள் தவ்பீக், முகேஷ், சரண் உள்ளிட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இதேபோன்று, திருச்சி புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஆமோஸ், மாவட்டத் தலைவர் வைரவளவன்
மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புறநகர் மாவட்டத் தலைவர் சத்யராஜ், மாவட்டச் செயலாளர் பாலகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + three =

You missed