
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) காலமானார். பிறந்த சில காலத்திலேயே தாயார் பத்மாவதியை இழந்தவர்.
அவருடைய 70’களின் துவக்கத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் படம் பிள்ளையோ பிள்ளை. அப்புறம் பூக்காரி, அணையா விளக்கு, சமையல்காரன் எனத் தொடர்ச்சியாக படங்கள்.
அனைத்திலும் பாடல்கள் ஹிட் ஆகியிருக்கும்.
பிள்ளையோ பிள்ளை படத்தின் “மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ?” “மீனாட்டும் கண் கொண்ட மீனாட்சி”, ” ஏழையின் சிரிப்பில் இறைவன்”,
பூக்காரி படத்தில் “காதலின் பொன் வீதியில்” போன்ற அற்புதமான பாடல்கள் இன்றும் இனிக்கும் ரகம்.
துவக்கத்தில் மு.க.முத்து ஆசிர்வதித்த எம்ஜிஆர் ,” உனக்கென ஒரு பாணியை பின்பற்றி நடி. அப்போதுதான் முன்னேற முடியும்” என்று சொன்னார்.
வினோதம் என்னவென்றால் சொன்னவரின் பாணியையே மு க முத்து அப்பட்டமாக பின்பற்றி நடித்ததுதான். வழக்கம் போல நிஜத்திற்கு முன் நிழல் எடுபடாமல் போய்விட்டது.
நடிப்பு மட்டுமின்றி நல்ல குரல் வளமும் கொண்டவர் முக முத்து.
அணையா விளக்கு படத்தில் “யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சன்னிதியில்” என்ற அவர் பாடிய பாடல் அப்போது ரேடியோவில் படு பிரசித்தம்.
தந்தை ஆட்சியை புகழ்ந்தும் அரசியல் எதிரிகளை சாடியும் பாடி இருப்பார். எதுவுமே எடுபடாமல் போய்விட்டது
சகல வசதிகளும் வாய்ப்பு இருந்தும் எங்கேயோ உச்சத்தில் போய் இருக்க வேண்டிய வாழ்க்கை,
“பாதை தவறிய
கால்கள் விரும்பிய
ஊர் சென்று
சேர்வதில்லை”
என்ற புலமைப்பித்தன் பாடலுக்கு எடுத்துக்காட்டாக முடிந்து விட்டது.
